Tuesday, 6 March 2012

பாரதிதாசன் பாடல்கள் - மயில்

அழகிய மயிலே! அழகிய மயிலே
அஞ்சுகம் கொஞ்ச, அமுத கீதம்
கருங்குயி லிருந்து விருந்து செய்யக்,
கடிமலர் வண்டுகள் நெடிது பாடத்,
தென்றல் உலவச் சிலிர்க்கும் சோலையில்
அடியெடுத் தூன்றி அங்கம் புளகித்
தாடு கின்றாய் அழகிய மயிலே!

உனதுதோ கைபுனையாச் சித்திரம்
ஒளிசேர் நவமணிக் களஞ்சியம் அதுவாம்!

உள்ளக் களிப்பின் ஒளியின் கற்றை
உச்சியில் கொண்டையாய் உயர்ந்ததோ என்னவோ!

ஆடு கின்றாய்; அலகின் நுனியில்
வைத்தஉன் பார்வை மறுபுறம் சிமிழ்ப்பாய்!
சாயல்உன் தனிச்சொத்து! ஸபாஷ்! கரகோஷம்!

ஆயிரம் ஆயிரம் அம்பொற் காசுகள்
ஆயிரம் ஆயிரம் அம்பிறை நிலவுகள்
மரகத உருக்கின் வண்ணத் தடாகம்
ஆனஉன் மெல்லுடல், ஆடல், உள்உயிர்,
இவைகள் என்னை எடுத்துப் போயின!
இப்போது, 'என நினைவு' என்னும் உலகில்
மீண்டேன். உனக்கோர் விஷயம் சொல்வேன்;
நீயும் பெண்களும் 'நிகர்' என்கின்றார்!
நிசம்அது! நிசம்! நிசம்! - நிசமே யாயினும்
பிறர்பழித் தூற்றும் பெண்கள்இப் பெண்கள்!
அவர்கழுத்து உன்கழுத் தாகுமோ சொல்வாய்!
அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்பதற்கே
இயற்கை அன்னை, இப்பெண் கட்கெலாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்! உனக்கோ,
கறையொன் றில்லாக் கலாப மயிலே,
நிமிர்ந்து நிற்க நீள்கழுத் தளித்தாள்!
இங்குவா! உன்னிடம் இன்னதைச் சொன்னேன்;
மனதிற் போட்டுவை; மகளிர் கூட்டம்
என்னை ஏசும் என்பதற் காக!

புவிக்கொன் றுரைப்பேன்; புருஷர் கூட்டம்,
பெண்களை ஆதிப் பெருநாள் தொடங்கி
திருந்தா வகையிற் செலுத்தலால், அவர்கள்
சுருங்கிய உள்ளம் விரிந்தபா டில்லையே!

பாரதிதாசன் பாடல்கள்

கருத்துரைப் பாட்டு

தலைவன் கூற்று

{வேந்தனிட்ட வேலையை மேற்கொண்டு செல்லும் தலைவன் தன் தேர்ப்பாகனை நோக்கி 'இன்று விரைந்து சென்று அரசன்இட்ட வேலையை முடித்து நாளைக்கே தலைவியின் இல்லத்தை அடைய வேண்டும்; தேரை விரைவாக நடத்து என்று கூறுவது.}

நாமின்று சென்று நாளையே வருவோம்;
வீழும் அருவிபோல் விரைந்துதேர் நடத்துவாய்;
இளம்பிறை போல்அதன் விளக்கொளி உருளை
விண்வீழ் கொள்ளிபோல் விளைநிலம் படியக்
வளையல் நிறைந்த கையுடை
காற்றைப் போலப் கடிது மீள்வோம்;
இளையளை மாண்புற யான்மணந் துவக்கவே.

{குறுந்தொகை 189-ஆம் பாடல், மதுரை ஈழத்துப் பூதன்தேவன் அருளியது}


தலைவி கூற்று

{தலைவனை நினைத்துத் தான் துயிலாது இருத்தலைத் தோழிக்குத் தலைவி கூறியது.}

ஆர்ப்புறும் இடிசேர் கார்ப்பரு வத்துக்
கொல்லையின் மணந்த முல்லைக் கொடியின்
சிரிப்ª¢பன அரும்பு விரிக்கும் நாடனை
எண்ணித் துயில்நீங் கியஎன்
கண்கள் இரண்டையும் காண்பாய் தோழியே!

(குறுந்தொகை 186-ஆம் பாடல். ஒக்கூர் மாசாத்தி அருளியது,)


தோழி கூற்று

{தலைவன், தலைவியை மணம் புரியாமல் நெடுநாள் பழகி, ஒருநாள் வேலிப்புறத்திலே வந்து நிற்கிறான்! அவன் காதில் விழும்படி, தலைவியை நோக்கிக் கூறுகிறாள் தோழி; "தலைவன் நட்பினால் உன் தோள் வாடினாலும் உன் அன்பை அது குறைத்து விடவில்லை" என்று}

மிளகு நீள்கொடி வளர்மலைப் பாங்கில்
இரவில் முழுங்கிக் கருமுகில் பொழிய,
ஆண்குரங்கு தாவிய சேண்கிளைப் பலாப்பழம்

அருவியால் ஊர்த்துறை வரும்எழிற் குன்ற
நாடனது நட்புநின் தோளை
வாடச் செய்யினும் அன்பைமாய்க்காதே!